By Mutharasi, mother of 8-year old Sandhya Sri, and TNPSC job aspirant

சுமந்த கனவுகள் 

வாழ்க்கைப்  பாதையின் கால ஓட்டத்தில்  திருமண பந்தத்தில் நுழைந்த நான், திகட்டாத அமுதமான என் செல்ல மகளின் வருகையைப் பற்றி  இங்கு பகிர்ந்துள்ளேன். அது எப்படி “மகள்” என்று நிச்சயமாக அன்றே நினைத்தேன் என்றால் பெண் குழந்தையின் பிடித்தம் மட்டும் அன்று;  “பெண் குழந்தை மீது நான் கொண்ட பைத்தியக்காரதனமான வெறி” என்பதுதான்.

3 மாத பேறு   காலம் வரை நான் பட்ட நிகழ்வுகளுக்கு “மசக்கை” என்று பெயர்  என்று யார் சொன்னது ? அது வாழ்வின் மகத்தான தருணங்கள். என்னதான் வாழ்வின் பாதிப்பான பல பக்கங்களை நான் கண்டாலும் என்னவளின் முகம் காண நான் ஒவ்வொரு நொடியையும் யுகமாய் கழித்தேன். எந்த மாத மருத்துவப்  பரிசோதனையையும் என் மகளுக்காக நான் செய்ய இயலவில்லை. ஆனால் மனம் தளராமல் என் மகளுடன், கொஞ்சி, குலாவி, சண்டையிட்டு விடியலுக்காக காத்திருந்தேன். குமட்டலும், மயக்கமும் என் தாரகையின் சிறு விளையாட்டென மகிழ்ந்தேன். என்னவளின் மெய் தீண்ட வேண்டாத தெய்வம் எல்லாம் வேண்டினேன். 

5 மாத முடிவு காலத்திலும், என் செல்லத்தின் துடிப்பினை என்னால் அறிய இயலவில்லை. முதல் முறையாக மருத்துவமனையை அடைந்தேன். என்னவள் என் மீது கோபம் கொண்டு எனக்காக கொடுத்த தண்டனை போலும். முகம் வியர்த்து, கை கால் நடுங்கி “மரணபயம்” என்பதை வாழ்வில் அறிந்தேன். அவளிடம் மன்றாடி கெஞ்சினேன். அவளும் பெண்ணல்லவா, என்னை மன்னித்து எனக்காக என் மடியில் தவழ சம்மதம் என்று உறுதி கூறுவது போல துடிப்பினை தந்தாள். 

இறைவனின் ஆசீர்வாதத்தால் 7-வது மாதத்தில் வளைப்பூட்டும் நிகழ்வு நடந்தது. என் தாய் வீட்டிற்கு வந்தேன். எல்லோர்க்கும் ஓர் தாய் என்றால் எனக்கு இருவர் – என் வளர்ப்பு அன்னையாகிய எனது அம்மாவின் அம்மா (ஆச்சி) தனது 76-வது வயதில் எனக்கு பேறு கால  நிகழ்வினை முகம் சுளிக்காமல் செய்து முடித்தாள். ஆம், எனக்கு அம்மா என பதவி உயர்வு வழங்க எனதருமை தங்கம் டிசம்பர் திங்கள் 18-ம் தேதி இரவு 8.45 மணிக்கு பிறந்தாள். வாழ்வில் பட்ட அனைத்து இன்னல்களுக்கும் சேர்த்து மகிழ்ச்சியை கடவுள் அளித்ததை உணர்ந்தேன் .  

மதி மயங்கிய நிலையில் நான் இருந்தாலும் என்னவளின் அழுகையும் மெய் தீண்டலும் என்னை மீண்டும் பிறக்க செய்தது. பாரதியாரின் வரிகளான “இங்கிவளை(னை) யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்பது போல. என் பூர்வ ஜென்ம புண்ணியமாக அமைந்தது, எனதருமை சந்தியா ஸ்ரீ-ன் வருகை!

சுமக்கும் கனவுகள்

வாழ்வில் இழந்த அனைத்தையும் எனக்காக என் மகள் மீட்டு தந்தாள். ஆனால் என் மகளுக்கு நான் என்ன செய்ய போகிறேன்! தெரியவில்லை!, புரியவில்லை! பொருளாதார நெருக்கடி! “என் மகளை வளமாக நல்வாழ்வு வாழ வைக்க வேண்டும்”. உறுதிபூண்டேன் அரசு வேலை பெற வேண்டும் என்று. 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. வாழ்க்கை கடலில் தத்தளித்திருந்த எனக்கு “கலங்கரை விளக்கமாய்” அமைந்தது, யோக் அமைப்பு. மன்னிக்கவும் “யோக் சொந்தங்கள்”. இங்கு தாயாகவும், தந்தையாகவும், நல் ஆசானாகவும், சகோதரனாகவும், சகோதரியாகவும் எண்ணற்ற குடும்ப உறுப்பினர்கள். “உன்னாலும் முடியும்” என்று நம்பிக்கை மிகுந்த வாசகங்கள். பயனற்ற உலர்நிலமாக இருந்த என்னை உருவாக்கிட நல்ல தளத்தினை தந்தது யோக் அமைப்பு. ஒரு விவசாயிக்கு தான் தெரியும் செடியின் வரலாறு. இந்த மண்ணிற்கு  எவ்வளவு உரமிட்டால் நல் விளைச்சலை தரும் என்றெல்லாம். எனக்குள் எவ்வளவு உரமிட்டால் நல்ல பயனை தரும் என, என் தகுதியை அறிந்து எனக்காக கல்வி கற்று தரும் ஆசான். 

அந்த செடியினை வளர்க்க தண்ணீர் ஊற்றும்  “குடும்பத்தை” பற்றி கூறியே ஆகிய வேண்டும். இந்த தோட்டத்தின் வேலியாக  என் கணவராகத்தான் இருக்க முடியும். “உனக்காக நான் இருக்கிறேன்! உன் இலட்சியக் கனவுகளுக்கு  என்றும் காவலனாக!” என்று கூறும் கணவான்மார்கள் எத்துணை   பேருக்கு கிடைக்கும்!  வீட்டு வேலை செய்ய வைக்காத அம்மா, என் ஆடை துவைக்கும் அக்கா, எனக்காக அனைத்தையும் செய்யும் அக்காளின் ஆசை மகன்கள் 2 பேர். இதற்கும் மேலாக எனதருமை செல்லத்தின்  புன்சிரிப்பு. வேறு என்ன வேண்டும். என் குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு “எனக்கான அரசு வேலை”. இத்துணை பேருக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன். அனைவரின் திருவடிகளிலும் வெற்றி கனியை சமர்பிப்பதுதான் நியாயமாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்று அரசு வேலைக்கான படிப்பினை முழு மூச்சாக படிக்கிறேன், நான் சுமக்கும் இந்தக் கனவும் கட்டாயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்!

நான் சுமந்த கனவு வெற்றியில் முடிந்தது. ஆனால் நான் சுமக்கும் இந்த கனவு நனவகுமா? காலத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.