P Krishnaveni, B Sc (Maths) (March 2021)

மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்என்ற வாசகத்திற்கு பொருள் தெரியாத வயதில் நான் வளர்த்த முதல் செடி, ஒரு தக்காளிச் செடி. ‘விளையாட்டுஎன்ற சொல்லே மனதில் நின்ற காலத்தில் என்னுடைய கவனத்தை திசைதிருப்பிய தருணம் அது.

ஒருநாள் என் சிறுவயது நண்பர்களுடன் ஆனந்தமாய், குதூகலமாய் விளையாடி விட்டு துள்ளிக் குதித்து கொண்டு வீடு நோக்கி சென்றேன். இந்த நேரம் தான் என்னை வேறொரு மனநிலைக்குக் கொண்டு சென்றது. நாங்கள் வரும் வழியில் என் தோழியின் கண்ணில் பட்டது முளை விட்டு நிற்கும் ஒரு செடி. எனக்கு அது என்ன செடி என்று கூட தெரியவில்லை. என் தோழி தான்அது தக்காளி செடிஎன்று கூறி என்னிடம் தந்தாள். அதன் வேர் சூரிய ஒளியில் படக்கூடாது, பட்டால் அது வளராதுஎன நண்பர்கள் என்னிடம் கூறினர். உடனே நான் அதன் வேர்களை கைகளால் பத்திரமாக மூடிக்கொண்டேன். மீன் தொட்டி கொண்டு வருவது போல மிக கவனமுடன் கொண்டு வந்தேன்

என் வீட்டில் ஒரு சிறு குச்சியினை எடுத்து மண்ணைத் தோண்டி  அந்த அழகிய வேர்களை சூரிய ஒளியில் பட விடாமல் மண்ணுக்குள்  ஒளித்து வைத்தேன். சிறிது தண்ணீர் ஊற்றி விட்டு வீட்டினுள் நுழைந்தேன்என் மனதில்அது எவ்வாறு வளரும்’, என்ற சிந்தனையே நிறைந்திருந்தது. எனது ஒவ்வொரு நாள்  விடியலும் செடியை நோக்கியே விடிந்தது. காலை, மாலை என இரு வேளைகளிலும் தண்ணீர் மட்டுமே ஊற்றினேன். ‘நண்பகலில் தண்ணீர் ஊற்றக்கூடாதுஎன்றும் என் நண்பர்கள் சொல்லியிருந்தனர். அதை கவனமாக பின்பற்றினேன். உரம் ஏதும் வைத்ததில்லை. அந்த செடி ஒவ்வொரு நாள் வளர்வதும் எனக்கு தெரியாமல் இருந்தது

சில நாட்களில் அதன் வளர்ச்சிக்கும், நான் நட்டு வைத்தபோது செடியின் வளர்ச்சிக்கும் வேறுபாட்டை உணர்ந்தேன். அந்நேரம்தான் தெரிந்ததுஎன் செடி வளர்கிறதுஎன்று!

சில நாட்களில் பூவும் வந்தது. பெரியவர்கள்பூ வந்தால் காய் காய்த்துவிடும் என்றனர் . அவர்கள் சொன்னது போலவே பச்சை நிறத்தில் காய் வந்தது. எனக்கு ஒரே கொண்டாட்டம்! ‘நானே வைத்த செடி, எனக்கு தக்காளி தரப்போகிறதுஎன்ற மகிழ்ச்சி. ‘அது எப்போது செந்நிறத்தில் வரப் போகிறதுஎன்ற ஆவலில் இருந்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சி என்னவென்றால் நாங்கள் வேறு வீட்டிற்கு செல்லப் போகிறோமாம், இங்கு வேறு யாரோ  குடியேறப் போகிறார்களாம். என் செடியின் முழுமையான வளர்ச்சியை பார்க்காமலேயே அதை விட்டு மனமில்லாமல் பிரிந்தேன்.

சில நாள் கழித்து என் செடியை  காணும் வாய்ப்பு வந்தது. நானும் ஆவலுடன் சென்று பார்த்தேன். அங்கு நான் கண்டது என் தக்காளிச் செடியை அல்ல, பல வகை அலங்கார செடிகளை!!