T Indira, BA (Economics)
திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் என்னும் சிற்றூரில் இயற்கை சூழ்ந்து தன்னார்வு மையமாக அமைந்துள்ளது எங்களின் யோக். அதை நிறுவி நடத்தி வருபவர்கள் மதிப்பிற்குரிய சித்ரா & வாசுதேவன் அவர்கள். யோக் உள்ளே நுழைந்ததும் லட்சியத்திற்கான பாதைகள் தெரியும். அதில் நாம் நமக்கான பாதைகளை தேர்ந்து எடுக்கும் போது, அதற்கான வழிகாட்டியாகவும் இருப்பார்கள். கோடகநல்லூரை சுற்றியுள்ள அனைத்து சிறு கிராமங்களும் பயன்பெறும் வகையில் யோக் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
யோக்கில் நடைபெறும் பல்வேறு வகையான இலவச பயிற்சிகள், பல மாணவர்களுக்கு அவரவர் திறமைகள் என்னென்ன என்பதை உணர வைத்திருக்கிறது. நடனம், யோகா, 10,12, மற்றும் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள், விளையாட்டுக்கான பயிற்சி, தையலுக்கான பயிற்சி, கோடைக்கால பயிற்சி வகுப்பு போன்ற பல வகுப்புகள் நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் மாரத்தான் நடத்தி வருவது போற்றுதலுக்குரியது. இவையனைத்திலும் ஒன்றான நடன வகுப்பைப்பற்றி நானிங்கு கூறப் போகிறேன்.
எங்களுக்கு யோக்கில் கற்றுத்தரும் நடனம் கிராமிய பாடல்களுடன் கூடிய கிராமிய நடனம். அத்தகைய கிராமிய நடனங்களை எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் மதிப்பிற்குரிய அன்பார்ந்த பயிற்சியாளர்கள் கலைமாமணி கைலாசமூர்த்தி ஐயா மற்றும் செல்வி அக்கா ஆவார்கள்.
முதலில் ஒயிலாட்டம், மற்றும் கும்மியை கலைமாமணி கைலாசமூர்த்தி அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். அவர்களை நாங்கள் அன்போடு தாத்தா என்று அழைப்போம். அவர்களின் மூலம் அறிமுகமான செல்வி அக்கா எங்களுக்கு கரகாட்டம், கும்மி, பறை, மேலும் பல்வேறு மாநிலங்களில் ஆடப்படும் நடனங்களை கற்றுக்கொடுத்தார்கள் இத்தகைய சிறு கிராமத்தில் வசிக்கும் நாங்கள் கரகாட்டம், கும்மி, ஒயிலாட்டம் தவிர்த்து பல மாநிலங்களின் பெருமைக்குள்ள நடனங்களையும் கற்று கொண்டோம்.
கற்று கொடுத்த நடனங்களை ஆட பல்வேறு மேடை நிகழச்சிக்களிலும் எங்களை பங்கேற்க செய்வார்கள் . மேலும் கிராமங்களில் நடனம் என்றாலே, அதுவும் பெண்கள் நடனம் ஆடினால் தவறு என்று கூறக்கூடிய சூழ்நிலையில் மனதில் ஒரு ஓரத்தில் ஆசை வைத்திருக்கும் எங்களைப்போன்ற குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக யோக் வகுப்புகள் அமைந்திருப்பது மகிழச்சிக்குரிய ஒன்றாகும்.
நடனம் கற்றுக் கொடுப்பவர்கள் எங்களுக்கு நடனம் மட்டும் இல்லாமல் வாழ்வு சார்ந்த நிகழ்வுகளும் கூறுவார்கள். அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து ஒரு உற்சாகமான வகுப்பாக இருக்கும் நடனம் பயிற்சி வகுப்பு. தவிர, நாங்கள் எந்த வகையான நடனம் ஆடுகிறோமோ அதற்கான உடைகள், நகைகள் போன்றவற்றை யோக் அமைப்பில் வாங்கி தந்து உற்சாகப்படுத்துவார்கள். மேலும் எங்கள் கல்லூரியில் இங்கு கற்ற நடனம் ஆடி நாங்கள் முதல் பரிசு வென்றது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.
நடனமே தெரியாத எனக்கு நடனம் கற்றுத்தந்து முதல் பரிசு வாங்கச் செய்தது இந்த யோக் அமைப்பு. நடனம் மட்டும் அல்லாமல் மேலும் பல கலைகளில் எனக்கு வாய்ப்புகளை தந்து இருள்சூழ்ந்த என் வாழ்விற்கு ஒளி வட்டமாக இருக்கிறது எங்கள் யோக் அமைப்பு!